மூலம்: இராஜபாளையம் செய்தி நிலையம்
தேதி: 12 ஜனவரி 2026
இராஜபாளையம் நூலகத்தின் 324-வது மாத இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்ற சொற்பொழிவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் குடிமைப்பொருள் வட்டாட்சியர் திரு.ஆனந்தராஜ் (இடமிருந்து மூன்றாவது)
இராஜபாளையம்: தைத்திருநாளை முன்னிட்டு, இராஜபாளையம் அரசு கிளை நூலகம் மற்றும் பெருந்தன்மைக் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து நடத்திய 324-வது மாத இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி 12.01.2026 காலை 11.00 மணியளவில், பழைய யூனியன் அலுவலக கட்டடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இலக்கியப் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்த மாதாந்திரக் கூட்டம், இன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகக் காட்சி தந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தை, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அமைத்தது.
முன்னாள் வட்டாட்சியர் திரு. பாலகிருஷ்ணன், B.A., தலைமை தாங்கினார். இராஜபாளையம் கிளை நூலகத்தின் நூலகரான திரு. உ. சண்முகவேல், M.Sc., B.Ed., MLS., பணியாளர்கள், வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை வரவேற்றுரை நிகழ்த்தி நல்வரவு கூறினார்.
சிறப்பு விருந்தினராக இராஜபாளைய குடிமைப்பொருள் வட்டாட்சியர் திரு.ஆனந்தராஜ் அவர்கள் கலந்துகொண்டு அனைவரையும் வாழ்த்தி பேசினார்.
அதனைத் தொடர்ந்து, முதல் சொற்பொழிவாக, பெருந்தன்மைக் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவரும் வாசகர் வட்டப் தலைவருமான பேராசிரியர் முனைவர் க. அழகர், M.A (T), M.Phil., Ph.D., அவர்கள் "பண்டைத் தமிழரின் விருந்தோம்பல்" என்ற சுவையான தலைப்பில் உரையாற்றினார். அவரது ஆழ்ந்த ஆய்வும் தன்னிகரற்ற சொல்லாட்சியும் பார்வையாளர்களை கவர்ந்தன.
அடுத்து, புலவர்.திரு.சிவகுமார் , M.A (Jn), M.A., M.Phil., சிந்தனைத் தமிழன் இதழின் ஆசிரியர், "தமிழரின் வீரம்" என்ற தலைப்பில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். தமிழ் இலக்கியத்தில் உள்ள வீரகாப்பியங்கள் மற்றும் சமூக வீரம் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.
தை மாதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக, கவிஞர் இரா. காளிஸ்வரன், B.A., MLSc., மற்றும் வாசகர் வட்டத்தின் பொருளாளர், "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற தலைப்பில் தனது கவிதை மணம் நிறைந்த உரையை வழங்கினார். தைப் பண்டிகையின் பண்பாட்டு சிறப்புகளை கவிதையாக்கம் செய்து வழங்கியது கூட்டத்தினரை மகிழ்வித்தது.
சமூக ஆர்வலரும் BSNL ஓய்வுபெற்ற பொறியாளருமான திரு. பொன்ராஜ் மற்றும் ரகுபதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். நூலகரான திருமதி ரா. சங்கரியம்மாள் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.
இறுதியாக, எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டுப் பண் பாடி நிகழ்ச்சியை முடித்து வைத்தனர். நூலகத்தின் தொடர்ச்சியான இலக்கிய முயற்சிகளையும், பொது மக்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பையும் இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது.
0 Comments